ட்ரெண்டிங்

வெள்ளப் பாதிப்பு- நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த மேயர்!

கனமழை, வெள்ளம் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய ராணுவத்தினர், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படை வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 10 ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள், உணவுகளை விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் மாநகராட்சி சார்பில், சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் பிஸ்கட்டுகள், பிரெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், காட்டன் துண்டுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை நேரில் பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் முன்னிலையில், நிவாரணப் பொருட்களானது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.