மேட்டூர் அனல் மின்நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 30- க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (செப்.20) காலை 07.00 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், இந்நிறுவனத்தில் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்யும் இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வடசென்னை அனல் மின்நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம், மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள், அந்த நிறுவனத்தில் இருந்து மேட்டூர் அனல் மின்நிலையம் கொள்முதல் செய்யும் பொருட்களின் தரம் மற்றும் மேட்டூர் அனல் மின்நிலையத்தின் கோப்புகள் ஆகியவற்றை ஆய்வுச் செய்து வருகின்றனர்.
அதேபோல், ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் பொருட்களின் சரியானதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவில் லாபம் ஈட்டி வரும் நிலையில், வருமான வரித்துறைக்கு நிறுவனத்தின் வருவாயைக் குறைத்துக் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.


