கோடைக்காலம் தொடங்கியுள்ளதாலும், கோடை விடுமுறை காரணமாகவும் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் ஏற்காட்டிற்கு ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு பேருந்து சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 08.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் இரவு பேருந்து நிலையத்தில் வந்தடையும். இந்த பேருந்து சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பு பேருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூர் காட்சிமுனை, சேர்வராயன் கோயில், மஞ்சக்குட்டை காட்சிமுனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, மான் பூங்காவிற்கு இயக்கப்படுகிறது. இப்பேருந்தில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூபாஐ 300 கட்டணமாகவும், சிறுவர்களுக்கு ரூபாய் 150 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பேருந்து சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


