ட்ரெண்டிங்

3 நாள் சுற்றுலா செல்ல ஏற்பாடு! 

 

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு 3 நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு 3 நாள் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலாத் திட்டங்கள் வரும் ஜூன் மாதம் வரை செயல்படுத்தப்படவுள்ளது. 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் இருந்து இந்த பேருந்துகள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை அல்லது இரவு புறப்பட்டு திங்கட்கிழமை காலை சென்னை திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோடைக்காலத்தை முன்னிட்டு, ஊட்டி சுற்றுலாத் திட்டத்தில் தொட்டபெட்டா மலை, ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு சவாரி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கொடைக்கானல் சுற்றுலாத் திட்டத்தில் தூண்பாறை, பசுமை சமவெளி, கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் நட்சத்திர ஏரி படகு சவாரி, வெள்ளி நீர்வீழ்ச்சிக்கும், ஏற்காடு-ஒகேனக்கல் சுற்றுலாத் திட்டத்தில் ஏற்காடு ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ரோஸ் கார்டன், படகு சவாரி, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். 

மைசூரு சுற்றுலாத் திட்டத்தில் சாமுண்டீஸ்வரி கோயில், நந்தி, மைசூரு அரண்மனை, பிருந்தாவனம் கார்டன், ஸ்ரீ ரங்கப்பட்டணம், திருப்பு கோடைக்கால அரண்மனை, லால்பாக் பூங்காவிற்கும், குற்றலாம் செல்லும் சுற்றுலாத் திட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரைக்கும், மூணாறு மறையூர் புத்துணர்ச்சி முகாம், ரவிக்குளம் வனவிலங்கு சரணாலயம், பிலாஸம் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 

இந்த சுற்றுலாத் திட்டத்தில் தங்கும் வசதி மற்றும் ஆறு வேளை உணவு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் வழங்கப்படும். பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வால்வோ சொகுசு பேருந்துகள், உயர்தர சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய சொகுசு பேருந்து இயக்கப்படும். சுற்றுலா செல்ல விரும்புவோர் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். 

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு 75500- 63121 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.