சுற்றுலா

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

சேலம் மாவட்டத்தில் பரவலாகத் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மாலையில் மழையும், அதிகாலையில் கடும் குளிரும் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால், வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, ஏரியில் படகுசவாரி, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் குகை கோயில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. 

 

அதேபோல், ஏற்காட்டில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சி கடந்த சில மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்ச்சியடைகின்றனர். 

 

ஏற்காட்டில் மழை மற்றும் குளிர் என ஒரு சேர நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.