ட்ரெண்டிங்

தப்பிக்க முயன்ற 3 பேரை மடக்கிப் பிடித்த வனத்துறை; 2 அடி மண்ணுளி பாம்பு மீட்பு!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 5 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை செய்ய முயன்ற மண்ணுளி பாம்பை, வனத்துறை அதிகாரிகள் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் தனிப்படைக் குழு அமைத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அப்போது, தப்பியோட முயன்ற மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து, காரில் இருந்த இரண்டு அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் மீட்டனர். நவநீதகிருஷ்ணன், மெர்லின் ராஜ் உள்பட மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். அதில், மெர்லின் ராஜ் என்பவர் காவலராகப் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், உள்ளூரைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் தப்பித்துச் சென்றதும், நவநீதகிருஷ்ணன், அசோக்குமார் இணைந்து மண்ணுளி பாம்பை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

 

மேலும், விசாரணையின் போது, மண்ணுளி பாம்பை ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கி வந்ததாக நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக, மூன்று பேர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து, அவர்கள் வைத்திருந்த 2 கார்கள், 1 இருசக்கர வாகனம், 5 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

 

தொடர்ந்து, தலைமறைவாக உள்ள அசோக்குமார் என்பவரைத் தேடி வருகின்றனர்.