ட்ரெண்டிங்

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள்!

 

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

 

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி 08- ஆம் தேதி மாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

போக்குவரத்து சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து, அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வரும் ஜனவரி 19- ஆம் தேதி வரை தற்காலிகமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், நாளை (ஜன.11) பணிக்கு திரும்புவதாகவும் உறுதியளித்தனர்.

 

இதையடுத்து, நாளை பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் ஜனவரி 19- ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

 

ஓய்வூதியர்களுக்கு நிதி வழங்குவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனையை ஏற்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

 

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இன்றே பணிக்கு திரும்பியுள்ளனர்.