ட்ரெண்டிங்

42 நீர்நிலைகள் வண்டல் மண் எடுக்க தகுதியானவை- சேலம் ஆட்சியர் தகவல்! 

விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளிலிருந்து கட்டணம் இல்லாமல் வண்டல் மண், களி மண் எடுப்பது தொடர்பாக தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜூன் 28) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க, இணையவழியில் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே அனுமதி வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் மாவட்ட அரசிதழில் பிரசுரிக்கப்படும் நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்றையதினம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 42 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு
மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் வட்டத்தில் 3 நீர்நிலைகளும், சேலம் மேற்கு வட்டத்தில் 3 நீர்நிலைகளும், வாழப்பாடி வட்டத்தில் 4 நீர்நிலைகளும், ஓமலூர் வட்டத்தில் 9 நீர்நிலைகளும், காடையாம்பட்டி வட்டத்தில் ஒரு நீர்நிலையும், மேட்டூர் வட்டத்தில் 5 நீர்நிலைகளும், எடப்பாடி வட்டத்தில் 4 நீர்நிலைகளும், ஆத்தூர் வட்டத்தில் 3 நீர்நிலைகளும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் 4 நீர்நிலைகளும், தலைவாசல் வட்டத்தில் 6 நீர்நிலைகளும் என மொத்தம் சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 42 நீர்நிலைகளில் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளால் இனம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கூடுதலான நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்குட்பட்ட மாவட்ட அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து எடுத்திட இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்து தமது விவசாய நிலங்களை வளம் பெறச் செய்வதோடு, மண்பாண்டத் தொழிலாளர்களும் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டிற்காக மண் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் தங்களது நிலம் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் வருவாய்த் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் இணைய தரவுகளின் கீழ் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியரால் மண் எடுக்க 30 நாட்களுக்கு மிகாமல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்.

விவசாய பயன்பாட்டிற்கென நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டருக்கு 185 கன மீட்டர் அளவிலும், புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டருக்கு 222 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டத் தொழிலுக்கு 60 கன மீட்டர் அளவிலும் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமில்லாமல் வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.