பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன் அனுமதிப் பெறாமல் புத்தகங்களை வெளியிட்ட பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு மெமோ அனுப்பியுள்ளது பெரியார் பல்கலைக்கழகம் நிர்வாகம்.
சேலம் மாவட்டம், கருப்பூரில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம். சர்ச்சைக்கு பெயர் போன இந்த பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் சுப்ரமணி. இந்த பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் பணியையும் கூடுதலாகக் கவனித்து வந்துள்ளார்.
பெரியார்வாதியான இவர், ஈ.வெ.ரா.பெரியார் குறித்து, ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? மெக்காலே- பழமைவாதக் கல்வியின் பகைவன்,பெரியாரின் போர்க்களங்கள் ஆகிய மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் முன் அனுமதி பெறாமல் புத்தகங்களை வெளியிட்ட பேராசிரியருக்கு பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மெமோ அனுப்பியுள்ளார். அதில், "அனுமதியின்றி புத்தகங்களை வெளியிட்டது, பல்கலைக்கழகத்தின் விதியை மீறுவது ஆகும்"என்று குறிப்பிட்டு விளக்கம் அளிக்கக் கோரி பேராசிரியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பேராசிரியர் சுப்ரமணி, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


