மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்து சென்ற இருவருக்கு சிறை- நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் விமலா (வயது 63). இவர் கடந்த 2014- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23- ஆம் தேதி அன்று காலை நெத்திமேடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், விமலாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து மூதாட்டி விமலா, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அத்துடன், சிசிடிவி காட்சிகளையும் தீவிரமாக ஆய்வுச் செய்தனர்.
இதையடுத்து, மணக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 38), அமானி கொண்டலாம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (வயது 34) ஆகியோர் மூதாட்டியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை அன்னதானப்பட்டி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, நீதிபதி வினோதா, குற்றவாளிகள் பிரபு, நாகராஜன் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூபாய் 3,000 அபராதமும் விதித்து பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

