ட்ரெண்டிங்

சர்வதேச நெகிழிப்பைகள் ஒழிப்பு தினம்- மாணாக்கர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கிய ஆட்சியர்! 

சர்வதேச நெகிழிப்பைகள் ஒழிப்பு தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 03) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடையே பேசியதாவது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கோடு ஆண்டுதோறும் ஜுன் 3- ஆம் நாள் சர்வதேச நெகிழிப்பைகள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் இன்றையதினம் இளம் தலைமுறையினருக்கு நெகிழிப் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினை எடுத்துரைக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடத்தப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தமிழ்நாடு அரசு முற்றிலும் தடைசெய்து, அதற்கான மாற்று பொருட்களான மஞ்சள் பை உள்ளிட்டவைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நெகிழிப்பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான ஏற்காட்டின் சுற்றுச்சுழலை மேம்படுத்துதல், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்து மாற்றுப்பொருட்களின் பயன்பாட்டினை அதிகரித்திடுதல், ஏற்காட்டில் உருவாகும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பசுமை ஏற்காடு திட்டம் ஒரு சிறந்த முன்னெடுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு 100 முதல் 400 ஆண்டுகளும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கப்புகள் 100 முதல் 1,000 ஆண்டுகளும் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. நமது தாய் தந்தையர் உள்ளிட்ட தலைமுறையினர் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது கையில் துணிப்பைகளை எடுத்து சென்று பொருட்களை வாங்கி வந்திருப்பதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். ஆனால் தற்போதைய நமது தலைமுறையில் நெகிழிப்பை பயன்பாடு அதிகரித்திருப்பதை நம்மால் காண முடிகிறது. எனவே நெகிழிப்பைகள் இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்திட இளையதலைமுறையினர் இப்பணியில் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

குறிப்பாக, நெகிழிப்பைகள் பயன்படுத்துவதால் நீர்நிலைகள் அனைத்தும் மாசடைந்து அதிகளவிலான பாதிப்புக்கு உள்ளாகிறது. நீர்நிலைகள் மட்டுமல்லாது நிலத்திற்கு அடியில் நெகிழிப்பைகள் செல்வதால் மழைநீர் நிலத்தடியில் செல்வது தடுக்கப்பட்டு நிலத்தடிநீர் மட்டம் பாதிப்படைகிறது. நெகிழிப்பைகள் உபயோகத்தால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பை உள்ளிட்ட மாற்று காரணிகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறையினராகிய நீங்கள் நெகிழிப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும். நெகிழிப்பைகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் இளைய தலைமுறையினராகிய உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 

சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து நெகிழிப்பைக்கு எதிரான பிரச்சாரத்தினை மக்கள் இயக்கமாக மாற்றி முன்னெடுத்து சென்று வளமான சமுதாயத்தினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.