ஆல் இந்தியா கிராமின் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான 10- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவாவில் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 8- க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் தமிழ்நாடு அணிக்காக சேலத்தைச் சேர்ந்த சேலம் கிரிக்கெட் அகாடமி சார்பில் கேப்டன் நகுல் வர்ஷன் தலைமையிலான 16 வீரர்கள் கலந்து கொண்டனர். அணியின் பயிற்சியாளராக முத்துகுமார் சக்திவேல் மேலாளர் ஆகியோர் கொண்ட குழு கோவாவிற்கு சென்றது. பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இறுதி போட்டியில் தமிழ்நாடு அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 8 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு அணி 2-வது இடம் பிடித்து வெள்ளி கோப்பையை வென்றது.
சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டும், பூங்கொத்துக் கொடுத்ததும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



