ட்ரெண்டிங்

தாக்கலானது சேலம் மாநகராட்சி பட்ஜெட் 2024.....அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!  

2024- 2025 ஆம் ஆண்டுக்கான சேலம் மாநகராட்சியின் பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இன்று (பிப்.21) காலை 10.00 மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தில், துணைமேயர் சாரதா தேவி, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எனினும், பட்ஜெட்டில் மக்களுக்கான அறிவிப்புகள் இல்லை என்றும், பொதுமக்கள் மீது வரியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், பட்ஜெட் அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வின் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதனிடையே, சேலம் மாநகராட்சியின் பட்ஜெட் 2024 புத்தகத்தை மேயர் ராமச்சந்திரன் வெளியிட, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் பெற்றுக் கொண்டார். பின்னர், மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சேலம் மாநகராட்சி பட்ஜெட் அறிக்கை தொடர்பான புத்தகம் வழங்கப்பட்டது.

முன்னதாக, சேலம் மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, மாநகராட்சி கூட்ட அரங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.