ட்ரெண்டிங்

பிறப்பு, இறப்பு சான்றிதழ்- சேலம் மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு! 

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பிறப்பு இறப்புகளை 21 நாட்களுக்குள் கட்டணமின்றியும், 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை பதிவு செய்யாமலிருந்தால் ரூபாய் 100 காலமாதம் கட்டணம் செலுத்தியும், 30 நாட்களுக்கு மேல் 1 ஆண்டு வரை பதிவு செய்யாமல் இருந்தால் ரூபாய் 200 காலதாமத கட்டணம் செலுத்தியும், 1 ஆண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருக்கும் பட்சத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உத்திரவின் பேரில் காலதாமத கட்டணம் ரூபாய் 500 செலுத்துவதனையடுத்தும் தமிழ்நாடு அரசு 2000- ம் வருடத்திய திருத்தியமைக்கப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவு சட்டப்பிரிவுகளின் படி பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், பிறந்த குழந்தையின் பெயரினை பிறப்பு பதிவு செய்த நாளிலிருந்து 1 ஆண்டுக்குள் கட்டணமின்றி பெற்றோர்கள் குழந்தை பிறப்பு நிகழ்ந்த பகுதியில் பிறப்பு, இறப்பு பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஏற்கனவே பதிவிறக்கம் செய்த சான்றிதழ்களில் ஏதோனும் பிழைகள் இருப்பின் அதனை திருத்தம் செய்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். 1 ஆண்டுக்கு மேல் குழந்தையின் பெயரினை பதிவு செய்ய சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் காலதாமத கட்டணமாக ரூபாய் 200 செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம். குழந்தை பிறந்த தேதியில் இருந்து 15 ஆண்டுக்குள் குழந்தையின் பெயரினை கட்டாயம் பிறப்பு பதிவு செய்ய வேண்டும்.

சேலம் மாநகராட்சி எல்லைக்குள் 31/12/2017 தேதி வரை பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், 01/01/2018 தேதி முதல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை www.crstn.org என்ற இணையதளத்தில் இருந்தும் கட்டணங்கள் எதும் இல்லாமல் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பிறப்பு, இறப்பு பதிவு செய்தல்,பெயர் பதிவு செய்தல் மற்றும் திருந்தங்கள் மேற்கொள்ளவது சம்மந்தமான சந்தேகங்களை சேலம் மாநகராட்சி மைய அலுவகத்தில் உள்ள அறை எண்.215-ல் அணுகி விவரங்கள் அறிந்து கொள்ளலாம். இடைதரகர்களை அணுகி ஏமாற வேண்டாமென சேலம் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொள்கிறார்.