சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை பாலக்காடு பகுதியில் விவசாய தோட்டத்தில் வசிப்பவர் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. வேணுகோபால் (வயது 74). இவரது வீட்டில் கடந்த மாதம், சிறுவன் உட்பட இரண்டு பெண்களை கட்டிப் போட்டு அரிவாளைக் காட்டி மிரட்டி ரொக்க பணம் மற்றும் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் ஓட்டுநர் உட்பட 2 பேரை கைது செய்தனர்.தொடர் விசாரணையில் மேலும் ஒரு பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிக் கொடுத்த திருப்பூர் மாவட்டம் சௌடாம்பிகா நகரைச் சேர்ந்த கிஷோர் குமார்(வயது 28 ) என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த சபரிராஜன் (வயது 28) என்பவரை காவல்துறையினர் கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


