சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குள்ளம்பட்டி சாலையில் கடந்த நவம்பர் 29- ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் கொலை செய்யப்பட்டு, அவரது தலை மட்டும் சாலையோரத்தில் கிடந்தது. சாலையில் இரத்த வெள்ளத்தில் தலைக் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் காரிப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தலையை கைப்பற்றி, உடலைத் தீவிரமாகத் தேடி வந்ததுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அத்துடன், இரண்டு தனிப்படைகளை அமைத்த காவல்துறையினர், குற்றவாளியையும், கொலை செய்யப்பட்ட உடலையும் தேடி வந்தனர். இந்த நிலையில், நாட்டாமங்கலம் அருகே ஏரி பகுதியில் உடல் பகுதியை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், செங்கல் சூளையில் பணிபுரிந்த வந்த தொழிலாளி குமார் (வயது 43) என்பதும் தெரிய வந்தது.
இதனிடையே, சந்தேகத்தின் பேரில் குள்ளம்பட்டி, பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த திருமலை என்ற 24 வயது இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, மது அருந்த குமாரை திருமலை அழைத்துச் சென்றதுடன், மது அருந்திய பின் குமாரை திருமலை கத்தியால் சரமாரியாக வெட்டியதும் தெரிய வந்தது.
மேலும், இளைஞர் திருமலை மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமலை, பின்னர் நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


