வரும் ஜனவரி 22- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அயோத்தியில் நடைபெற்று வருகின்றனர். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வெளிநாட்டு தூதர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அயோத்திக்கு வந்து ராமரை தரிசிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 9 நகரங்களில் இருந்து ஆஸ்தா ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 22- ஆம் தேதி முதல் இந்த ரயில் பயணம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ரயில்களுக்கான ஏற்பாடுகளை மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்திய ரயில்வேத் துறையின் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


