ட்ரெண்டிங்

ஆடுகளைத் திருடிய 2 இளைஞர்கள் கைது!

 

சேலம் மாவட்டத்தில் ஆடுகளைத் திருடிய 2 இளைஞர்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சியில் உள்ள அபிநவம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து ஆடு திருடியதைப் பார்த்த பொதுமக்கள், இருவரையும் விரட்டி பிடித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

அதைத் தொடர்ந்து, அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 20), வலசையூர் ஸ்பின்னிங் மில் பகுதியைச் சேர்ந்த தயாநிதி என்பவரின் மகன் ஹரிஸ் (எ) கரீம் அலாத்திஸ் (வயது 23) என்பதும் தெரிய வந்தது.

 

இருவரும் கல்யாணகிரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்ய பயன்படுத்தும் மெகா சைஸ் பேக்குகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் ஆடுகளைத் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவுச் செய்து கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.