காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகப் பரவலாக மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று முன்தினம் (நவ.30) வினாடிக்கு 3,771 கனஅடியாக வந்துக் கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று (டிச.01) 3,030 கனஅடியாக சரிந்தது. இன்று (டிச.02) மேலும் சரிந்து வினாடிக்கு 2,556 கனஅடியாக அணைக்கான தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. தற்போது, மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட நீர் திறப்பு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று (டிச.02) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.51 அடியில் இருந்து 66.74 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 29.96 டி.எம்.சி.யாக உள்ளது.


