ட்ரெண்டிங்

ஏற்காடு மகளிர் விடியல் பயணத்திட்டம் தொடக்கம்! 

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைக் கிராம மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவையினை இன்று (மார்ச் 14) சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், ஏற்காடு பேருந்து நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை இ.ஆ.ப. முன்னிலையில் நடைபெற்றது. 

பேருந்து சேவையினைத் தொடங்கி வைத்து, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் மகளிரின் பல்வேறு திட்டங்களை அறிவித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், மாதம் ரூபாய் 1,000 பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சாதாரண அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விடியல் பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மலைப் பகுதிகளில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மாதம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கையில், மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவைகள் மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலைப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு, இன்றைய தினம் மலைப் பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏற்காடு மலைப்பகுதிகளில் வாழும் சுமார் 65 கிராமங்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

அதேபோன்று, கருமந்துறை மலைப் பகுதிகளில் வாழும் சுமார் 98 கிராமங்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவையினை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன். துணை மேலாளர்கள் சிவலிங்கம், மணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.