ட்ரெண்டிங்

ஏற்காட்டில் -பனிப்பொழிவு -படகு சேவை நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !

 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில்,நேற்று அதிகாலை முதல் திடீரென கடும் பனிப்பொழிவு சூழ்ந்தது. இதனால் முழு ஏற்காடு பகுதியும் பனி மூட்டத்தில் மூழ்கியது.வழக்கமாக வார இறுதியில் பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.ஆனால் நேற்று ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் முக்கிய சுற்றுலா இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

நேற்று அதிகாலை 5 மணி முதலே ஏற்காடு ஏரிப்பகுதி, வியூ பாயிண்ட், லேடீஸ் சீட் ஜென்ஸ் சீட் ஏரி பூங்கா, அண்ணா பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் பனிப்பொழிவால் வெண்மையடைந்தன.

காலை 9 மணிக்கு பிறகு பனிப்பொழிவு மேலும் அதிகரித்து,பனி மூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை தொடர்ந்து பெய்தது.பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாகப் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.வளைவுகள் உள்ள பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

ஏற்காடு ஏரியில் பனிப்பொழிவு காரணமாக நீர்மட்டம் முழுவதும் தெரியாத அளவுக்கு பனி பரவியது. ஏரியின் மேற்பரப்பு முழுவதும் வெள்ளை பனித்திரையாக காட்சியளிக்க, படகு இயக்கம் மிகவும் சிரமமாக மாறியது.இதனால் படகு இல்ல நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களால் படகு சேவையை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்தது.

மழையை பொருட்படுத்தாமல் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள்,படகு சேவை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.குறைந்தபட்சம் ஏரி காட்சியாவது பார்க்கலாம் என நினைத்தோம்,ஆனால் பனி காரணமாக எதுவும் தென்படவில்லை என சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.