ட்ரெண்டிங்

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பெரியார் பல்கலை. துணைவேந்தர்!

 

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த ஜெகநாதன், சட்டவிரோதமாக அரசு நிதியைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், கருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

அதன்படி, பியூச்சர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பல்வேறு முறைகேடுகளில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், இது குறித்து புகார் அளித்த வரை சாதி பெயரைக் குறிப்பிட்டு திட்டியதால் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில், துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

 

அவருக்கு உறுதுணையாக இருந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ், ரமேஷ் கண்ணா ஆகியோர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

 

மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நிபந்தனை ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தொடர்ந்து ஏழு நாட்கள் கையெழுத்திட வேண்டும்; காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை துணைவேந்தர் வழங்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.