"ஏற்காடு செல்பவர்களின் கவனத்திற்கு..."- மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
சேலம் மாவட்டம், குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கன இரக வாகனங்கள் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாவட்டம், குப்பனூர் - கொட்டச்சேடு - வாழவந்தி சாலை கி.மீ. 5/4-ல் ஏற்கனவே சேதமடைந்த சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்ய சேலம் நெடுஞ்சாலை. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு. கோட்டப்பொறியாளர். கேட்டுக்கொண்டதன் பேரிலும், சாலைப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஜூலை 31- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6- ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் குப்பனூர் - கொட்டச்சேடு - வாழவந்தி வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியே அனுமதிக்கப்படும்.
இதர கனரக வாகனங்கள் மாற்று வழியாக மேற்குறிப்பிட்ட நாட்களில் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



