ட்ரெண்டிங்

லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு.... ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு! 


சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த விஜய் (வயது 20) தொழிலாளி ஆவார். இவர் கடந்த 2017- ஆம் ஆண்டு நெத்திமேடு பகுதியில் சாலையில் நடந்துச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி காவல்துறையினர், லாரி ஓட்டுநர் தனபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் படி, அவரை சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. லாரி ஓட்டுநர் தரப்பு வாதங்கள், உயிரிழந்த விஜய் குடும்பத்தின் வாதங்கள், காவல்துறை தரப்பு வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. 

இதையடுத்து, ஓட்டுநர் தனபால் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து,  ஓட்டுநர் தனபால், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.