30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த காட்டு மாட்டை சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பெலாத்தூர் கிராமம். இங்கு உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் காட்டு மாடு தவறி விழுந்துள்ளது.
தகவலறிந்து வந்த ஏற்காடு வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காட்டெருமையை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். தண்ணீர் அதிகமாக இருந்ததாலும், காட்டு மாட்டின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாதாலும், வனத்துறையினர் கால்நடை மருத்துவரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தினர்.
பிறகு கிணற்றில் இறங்கிய வனத்துறையினர் கிரேன் உதவியுடன் சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் காட்டு மாட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் காட்டு மாடு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


