ட்ரெண்டிங்

காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய் உடைந்தது!


சேலம் மாவட்டம், மேட்டூரில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் லட்சக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணானது.

மேட்டூர் அணையில் இருந்து 10- க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே காவிரி பாலத்தின் வழியாக அமைக்கப்பட்டுள்ள காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், லட்சக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது.

இதன் காரணமாக, 30- க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைப்படும் சூழல் உருவாகியுள்ளது. காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 5 முறை உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாயின் பராமரிப்புப் பணிகள் தனியாரிடம் இருப்பதாலேயே இந்த நிலைமை என்று கூறப்படும் நிலையில், இதற்கு உரிய தீர்வு காண மேட்டூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.