ட்ரெண்டிங்

ஜவுளித் தொழில் முனைவோர்களுடன் சேலம் ஆட்சியர் ஆலோசனை! 

சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பாக ஜவுளித் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் நேற்று (ஜூலை 01) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது, முதலமைச்சர் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பினை பெருக்கவும், பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜவுளித் தொழில் முனைவோர்களுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாடு அரசால் 50 சதவிகிதம் அரசு மானியத்துடம் அதிகபட்சம் ரூபாய் 2.50 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும். இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு நிலம், உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுசுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட வசதிகளை உறுதிச் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி. அலுவலகம், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமெனவும், சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் நிலம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் தவிர்த்து பிற இனங்கள் அரசின் மானியத்தைப் பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மண்டல துணை இயக்குநர். துணிநூல் துறை, 1A-2/1. சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம்- 636006 என்ற முகவரியிலும், 0427- 2913006 என்ற அலுவலக தொலைபேசி எண் மற்றும் ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், துணிநூல் துறையின் மண்டல துணை இயக்குநர் அம்சவேணி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.