ட்ரெண்டிங்

மேட்டூர் அணைக்கு வந்தது காவிரி நீர்....விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணைக்கு வந்தது காவிரி நீர்....விவசாயிகள் மகிழ்ச்சி! 

கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது மேட்டூர் அணைக்கு வந்தடைந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, காவிரி ஆற்றில் இருந்து பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளைக் கண்காணிக்கவும், ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். 

இதன் காரணமாக, இன்று (ஜூலை 27) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கன நீர்வரத்து வினாடிக்கு 2,100 கனஅடியில் இருந்து 3,343 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.87 அடியாக சரிந்துள்ள நிலையில், நீர் இருப்பு 28.44 டி.எம்.சி.யாக உள்ளது.

காவிரி நீர்வரத்து அதிகரித்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரில் அளவு அதிகரித்துள்ளதாலும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடிக்கு மேல் திறக்கப்பட்டால் மட்டுமே கடைமடை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.