ட்ரெண்டிங்

பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம்!- மேட்டூர் அணையின் தற்போ

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருவதால் குறுவைச் சாகுபடி கேள்விக் குறியாகியதுடன், 28 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்களின் ஒன்றான மேட்டூர் அணை, கடல் போல் காட்சியளித்த நிலையில், தற்போது ஒரு குளம் போல் மாறியுள்ளது. கர்நாடகாவில் இருந்து நீர்வரத்துக் குறைந்துள்ளதுதான் இந்த அவல நிலைக்கு காரணம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை டெல்டா பாசனத்திற்கு சுமார் 125 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்ற நிலையில், கடந்த 56 நாட்களில் 46 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு 79 டி.எம்.சி. தண்ணீர் குறுவைச் சாகுபடிக்கு தேவைப்படுகிறது. ஆனால், மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு 23 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே. இந்த 23 டி.எம்.சி.யையும் பாசனத்திற்கு அப்படியே திறந்துவிட முடியாது. குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீரையாவது அணையில் இருப்பு வைக்க வேண்டியது கட்டாயம். 

இதனால் தற்போதுள்ள நீர் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இதற்கு பிறகு நீர்வரத்து அதிகரிக்காவிட்டால் நீர் திறப்பை முழுவதுமாக நிறுத்த வேண்டி வரும்.  குறுவைச் சாகுபடியின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. கடந்த 2013- ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் மேட்டூரில் நீர் இருப்பு 2.9 டி.எம்.சி.யாக குறைந்ததால் டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்கு நீரின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போதும் அதே போன்ற நிலை வருமோ என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். பாசனத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளில் வழிநெடுகிலும் செயல்பட்டு வரும் 155 குடிநீரேற்று திட்டங்கள் மூலம் 28 மாவட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் 28 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.