ட்ரெண்டிங்

உயிருக்கு பயந்து காரை விட்டு ஓட்டம் எடுத்த ஜோதிடர்!

 

மேட்டூரில் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி, 5.60 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து உயிர் தப்பிக்க காரை பாதி வழியில் நிறுத்திவிட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த முருகேசன்- புவனேஸ்வரி தம்பதியர், மேட்டூரைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. பிரமுகரும், ஜோதிடருமான மாதேஸ்வரனை சந்தித்துள்ளனர். அப்போது, தம்பதியரின் வீட்டிற்குள் புதையல் இருப்பதாகக் கூறி ஜோதிடர், அதற்கான சிறப்பு பூஜை செய்ய 5.60 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

 

இதன் பிறகு, முருகேசனின் செல்போன் அழைப்பை அவர் தவிர்த்ததால், தான் ஏமாற்றப்பட்டதை தம்பதியர் புரிந்துக் கொண்டனர். இதனால் மாதேஸ்வரனை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த தம்பதியர், தங்கள் உறவினர் ஒருவருக்கு திருமணமாகவில்லை என்று ஜோதிடரிடம் கூற, மேட்டூர் காவிரி ஆற்றில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என அழைத்துள்ளார்.

 

இதையடுத்து, மேரி என்பவரும், அவரது உறவினரும் சம்பவ இடத்திற்கு செல்ல அங்கு காரில் வந்த மாதேஸ்வரன், இருவரையும் வாகனத்தில் ஏற்றியுள்ளார். அவரை பிடிப்பதற்காக மறைவான இடத்தில் காத்திருந்த முருகேசன் தம்பதியர் கூச்சலிட்டனர். இதையடுத்து, ஜோதிடர் மாதேஸ்வரன் காரை சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு, ஓட்டம் பிடித்தார்.

 

வாகனத்தை கைப்பற்றிய மேட்டூர் காவல்துறையினர், ஜோதிடர் மாதேஸ்வரனால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.