ட்ரெண்டிங்

சிகிராஸ் எனும் கோரை புற்கள் மூலம் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் சேலம் பெண்!

 

தன்னம்பிக்கையோடு சிறந்த முன்னெடுப்புகளும் இருந்தால், மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம், ஆத்தூரில் பெண் ஒருவர் கைவினைப் பொருட்களில் சாதனை படைத்தது வருகிறார். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

உலகின் பலவித பரிமாணங்களோடு ஒரு பெண் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக, தோழியாக என திகழ்கிறார். அத்தகைய பெண்கள் விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த நிஷா கைவினைப் பொருட்களை உலகளவில் விற்பனை செய்து வருகிறார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நிஷா, கடந்த 2007- ஆம் ஆண்டு துரை என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், நிஷாவுக்கு ஓவியம் மீதான ஆர்வத்தால், வடமாநிலங்களில் கொலு பொம்மைகளை வண்ணம் தீட்டி விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விளையும், சிகிராஸ் எனும் கோரை புற்களை வாங்கி இயந்திரம் உதவி இல்லாமல், கைகளாலிலேயே கைப்பைகள், கூடைகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து தமிழகம் மட்டுமின்றி உலகளவில் வர்த்தகம் செய்து வருகிறார்.

இது குறித்து நிஷா கூறுகையில், "சிகிராஸ் வகையான புற்களை வாங்கி 50 வகையான பொருட்களை செய்கிறோம். நெகிழிக்கு மாற்றாக இதைக் கண்டு வந்திருப்பதால் மக்கள் வரவேற்பு கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஐந்து கிலோ எடைக்கொண்ட ஒரு கட்டு புற்கள் 400 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 1,300 ரூபாயாக உள்ளது. மேலும், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, சூலூரில் உள்ள இந்திய விமானப் படை தளம் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட இடங்களில் கடை அமைத்து, 80- க்கும் மேற்பட்ட பெண்களை இத்தொழில் ஈடுபடுத்தியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் பலரும் இவரது வாடிக்கையாளராக உள்ளனர். இந்த வகையிலான கைவினைப் பொருட்களை 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இத்தகைய கைவினைப் பொருட்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக நிஷா கூறியுள்ளார்.