ட்ரெண்டிங்

தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

 

குடியரசுத் தினத்தையொட்டி, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். 

 

சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான குடியரசுத் தினத்தன்று முன் அனுமதி பெறாமல் நிறுவனங்கள் செயல்படுகிறதா? என்பது குறித்தும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் உத்தரவிட்டிருந்தார். 

 

அவரது மேற்பார்வையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் நேற்று (ஜன.26) சேலம், ஆத்தூர், மேட்டூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர். 

 

ஆய்வில் 34 கடைகள் உள்பட 70 நிறுவனங்களில் குடியரசுத் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியில் ஈடுபடுத்தியதும், அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல் இருந்ததும் தெரிய வந்தது. 

 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 70 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தேசிய பண்டிகைகள் மற்றும் சிறப்பு விடுமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை நடவடிக்கை எடுத்தனர். இதேபோன்று தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். அப்போது சட்ட விதிமுறைகள் கடைபிடிக்காமல் கடைகள், நிறுவனங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் தெரிவித்தார்.