ட்ரெண்டிங்

சிங்கிபுரம் ஜல்லிக்கட்டு- சீறி பாயும் காளைகளை அடக்கி வரும் மாடுபிடி வீரர்கள்! 

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், சிங்கிபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. முன்னிலையில் இன்று (ஏப்ரல் 05) சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இருந்து 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 

108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவுச் செய்யப்படுகிறது. 

மேலும், விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில். சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் பாரதி, உதவி இயக்குநர் ரகுபதி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி, ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.