ட்ரெண்டிங்

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும்- ஆட்சியர் வேண்டுகோள்! 

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதிச் செய்யும் வகையில் அலுவலர்களுடனான வாராந்திர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி. இ.ஆ.ப. தலைமையில் இன்று (மே 06) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கோடை வெப்பம் அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிச் செய்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்த வாரம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றைய தினம் நடைபெற்ற குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு மற்றும் எந்தெந்த பகுதிகளில் வரவுள்ள நாட்களில் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேவைக்கேற்ப புதிய நீராதாரங்களை ஏற்படுத்திடவும். மேலும் பயன்படுத்தாமல் நீர் ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக மேம்படுத்தி குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்திடவும். குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை விரைந்து முடித்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தொடர்புடைய அலுவலர்களை ஒருங்கிணைந்து வாட்ஸ் ஆப் குழு மூலம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் குடிநீரை செடி, கொடிகள் உள்ளிட்ட தோட்டப் பயன்பாடுகள், பிற தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்திட வேண்டுமெனவும். கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திடத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

தற்பொழுது, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 192.591 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களின் 60 வார்டுகளில் உள்ள 9.66 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனி குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்டம் ஆகிய காவிரி குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் 130 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் ரூபாய் 149.11 கோடி மதிப்பீட்டில் 1,37,845 குடிநீர் இணைப்புகள் வழங்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இதுவரை 1,12,015 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு மீதமுள்ள குடிநீர் இணைப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஜல் ஜீவன் திட்டம். மாநில சேமிப்புத் திட்டம், மாவட்ட சேமிப்புத் திட்டம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


கோடை காலம் என்பதால் குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதேனும் வரப்பெற்றால் அதன்மீது உடனடி நடவடிக்கைகளைத் தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களுக்குத் தேவையான சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் பிரபாகரன்,செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சேகர், மாநகர் நல அலுவலர் மரு.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.