ட்ரெண்டிங்

சேலத்தில் மாண்புமிகு மாணவி திட்டம் தொடக்கம்!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இப்பகுதிகள் கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைத் திருமணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கரி முயற்சியின் பேரில் மாண்புமிகு மாணவி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

வாழப்பாடி அருகே உள்ள சேசன்சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் இ.கா.ப., மாண்புமிகு மாணவி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் இ.கா.ப.,அரசுப் பள்ளி மாணவியர் போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெறும் வகையில் மாண்புமிகு மாணவி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் காவல்துறையின் சார்பில் அரசுப் பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் குழந்தைத் திருமணங்கள் மற்றும் இளம்வயது திருமணங்களால் பெண்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு காவல்துறையினர் எடுத்துக் கூறவுள்ளனர்.

 

பள்ளி இறுதிப் படிப்பில் பயின்று வரும் மாணவியர் அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தேவையான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். வாழப்பாடியில் தொடங்கியுள்ள மாண்புமிகு மாணவி திட்டம் சேலம் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.