ட்ரெண்டிங்

நவ.26- ஆம் தேதி சேலத்திற்கு வருகிறது முத்தமிழ்த்தேர்! 

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில், "எழுத்தாளர் கலைஞர் குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளைச் செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி கடந்த நவம்பர் 04- ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் துவக்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வரும் நவம்பர் 26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தியானது சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. எனவே, முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகையின்போது, பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அழைப்பு விடுத்துள்ளார்.