ட்ரெண்டிங்

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கான நீர்வரத்து வினாடிக்கு 45,000  கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 22,000 கனஅடிக்கு மேல் உள்ளது. 

இதன் காரணமாக, தமிழகம்- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து 7,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

அதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 119 கனஅடியில் இருந்து 177 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 65.80 அடியாக சார்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 29.19 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.