ட்ரெண்டிங்

சேலம் வழியாக சென்ற ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்! 

தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கடத்தி வருவது அதிகரித்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 02) அதிகாலை ரயில்வே உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர், சேலம் வழியாக கேரளாவுக்கு சென்றுக் கொண்டிருந்த ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்பதிவில்லா பெட்டியில், கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்ட காவல்துறையினர், அந்த பேக்கை எடுத்து, இது யாருடையது என்று ரயில் பெட்டியில் இருந்த பயணிகளிடம் கேட்டனர். எனினும், யாரும் அந்த பேக்கை உரிமைக் கோரவில்லை. 

இதையடுத்து, அந்த பேக்கை காவல்துறையினர் திறந்துப் பார்த்த போது, கஞ்சா இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து, கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர், சேலம்  ரயில்வே  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பேக்கில் சுமார் மூன்று கிலோ கஞ்சா இருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.