ட்ரெண்டிங்

மாவட்டக் கிளை நூலகத்திற்கு போதிய இடவசதி இல்லை என போட்டித் தேர்வர்கள் புகார்!

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கிளை நூலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் போட்டித் தேர்வர்கள் மற்றும் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஆத்தூர் அருகே உள்ள ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட கிளை நூலகம் மூலம் ஆத்தூர், தலைவாசல், தம்மம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 200- க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக, பயனடைந்து வருவதுடன், வாசகர்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

இதனிடையே, கழிவறை, குடிநீர்  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக, நூலகத்தைப் பயன்படுத்தி வரும் அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நூலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், வெளியே அமர்ந்து படிக்கும் சூழலும் உள்ளதால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பழமையான தமிழ் நூல்கள், குழந்தைகளுக்கென மெய்நிகர் நூலகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய உள்ள நூலகத்திற்கு போதிய இடவசதி செய்து தர வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.