ட்ரெண்டிங்

ஓட்டுநருக்கு நெஞ்சுவலி... கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து!

 

இன்று (அக்.28) காலை 09.00 மணிவாக்கில், சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. வாழப்பாடியைத் தாண்டி பேருந்து வந்துக் கொண்டிருந்த நிலையில், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது, பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட, பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புச் சுவரின் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 10- க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல், பேருந்தின் ஓட்டுநர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மேட்டுப்பட்டி காவல்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில், "பேருந்தை ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியதாகவும், நெஞ்சுவலி ஏற்பட்ட போது அவர் பேருந்தை நிறுத்த முற்பட்டுள்ளார்; ஆனால் அதிவேகம் காரணமாக, பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது" தெரிய வந்துள்ளது.

 

விபத்தில் அனைத்து பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.