ட்ரெண்டிங்

4 மாவட்ட கிராமங்களுக்கு 100% குடிநீர் வசதி- மத்திய அரசு விளக்கம்!

 

தமிழகத்தில் காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் விநியோகிக்கும் ஜல்ஜீவன் திட்டத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் வேலுசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகிய உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய ஜல்ஜீவன் துறை அமைச்சகம், இந்த திட்டம் தொடங்கும் முன் தமிழகத்தில் 17.3% வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வசதி இருந்ததாகவும், தற்போது 77.09% வீடுகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 100% குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.