இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை இன்று (அக்.16) தொடங்கியுள்ளது.
இன்று (அக்.16) நண்பகல் பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானம், சேலம் விமான நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, விமானத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், மீண்டும் பயணிகளுடன் பெங்களூரு சென்ற விமானத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், ராஜேந்திரன் மற்றும் சேலம் விமான நிலைய இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அலையன்ஸ் ஏர் நிறுவனம், சேலத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை வழங்கவுள்ளது. அதேபோல், வரும் அக்டோபர் 29- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்கவுள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையை இரு மார்க்கத்திலும் தொடங்கவுள்ளது.


