ட்ரெண்டிங்

குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.... வெளியில் தெரிந்த நந்தி!

 

மேட்டூர் அணை நீர்மட்டம் 65.61 அடியாக சரிந்ததால், பண்ணவாடி ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையின் தலை நீருக்கு வெளியே காட்சியளித்தது.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், கடந்த மூன்று நாட்களாக அணைக்கு வினாடிக்கு 54 கனஅடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. குடிநீருக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

 

நீர்வரத்து சரிவால், கடந்த மாதம் 24- ல், 70.81 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 65.61 அடியாக சரிந்தது. அணைக்கு நீர்வரத்துக் குறைந்ததாலும், நீர்திறப்பு அதிகரித்துள்ளதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. 

 

கடந்த 23 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 5 அடியும், நீர்இருப்பு, 4 டி.எம்.சி.யும் சரிந்துள்ளது. நீர்மட்டம் 70 அடிக்கு கீழே சரியும் போது, அணை பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில், 10 உயர பீடம், 10 உயரம் கொண்ட ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை வெளியே தெரிய துவங்கும். அந்த வகையில், நீர்மட்டம் 65.61 அடியாக குறைந்ததால் நந்தி சிலை தலை மட்டும் நீர்பரப்பு பகுதிக்கு வெளியே தெரிந்தது. அதை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத் துடன் பார்த்து ரசித்தனர்