வரும் அக்டோபர் 29- ஆம் தேதி முதல் சேலம்- சென்னை இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) அறிவித்துள்ளது.
அதன்படி, சேலம்- சென்னை, சென்னை- சேலம் ஆகிய வழித்தடங்களில் வரும் அக்டோபர் 29- ஆம் தேதி முதல் நேரடி விமான சேவையும், தினசரி விமான சேவையும் தொடங்கப்படவுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு www.goindigo.in என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கவுள்ளதால், சேலம் மாவட்ட மக்கள், தொழிலதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் சரக்கு ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று வணிகர்கள் கூறியுள்ளனர்.


