ட்ரெண்டிங்

பெற்றோர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்! 

பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. அறிவுறுத்தியுள்ளார். 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "சமீப நாட்களில் வெயிலின் தாக்கம் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் காலை 11.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் மேற்குறிப்பிடப்பட்ட நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும். விடுமுறை காலங்களில் ஏரி. குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆபத்தான நீர் நிலைகளில் விளையாடாமல் இருப்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சூழ்நிலையில் தாகம் ஏற்படா விட்டாலும் கூடத் தேவையான அளவு குடிநீர் அருந்த வேண்டும். கோடைகால பழங்களான பனை நுங்கு, இளநீர், வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை பழச்சாராகவோ அல்லது நேரடியாகவோ உடலுக்கு நீர்ச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் துரித உணவு வகைகள், கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள் மற்றும் ஐஸ்கிரீமை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் சின்னம்மை, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு நீர் சார்ந்த உணவு வகைகள் அதிகம் எடுத்துக்கொள்ள செய்ய வேண்டும். தேவையேற்பட்டால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சைப் பெறலாம்.

மேலும், வெயிலின் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ள காவல்துறையினர், விவசாயிகள், பேருந்து நடத்துனர்கள். ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள், சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் மருத்துவத்துறையினரால் கோடைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை கவனமாக பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதிக வெப்பத்தின் காரணமாக உடல் சோர்வு, தலைச்சுற்றல், குமட்டல், மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.