ட்ரெண்டிங்

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 120 நாட்களில் 92 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், நீர் இருப்பு 69 டி.எம்.சி.யாகவும் இருந்ததால், குறுவைச் சாகுபடிக்காக, கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீர் திறந்து வைத்தார். ஆனால், போதிய மழை இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

இதனால் குறுவைச் சாகுபடிக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல், டெல்டா பகுதியில் பயிர்கள் கருகின. குடிநீர் தேவைக்காகவும், பாசனத்திற்காகவும், கடந்த 120 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து 92 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, 31.30 அடியாகவும், நீர் இருப்பு 8.05 டி.எம்.சி.யாகவும் குறைந்தது.

இதனால் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நாளையுடன் (அக்.10) நிறுத்தப்படுகிறது.

இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,973 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,973 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000  கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான அவகாசம், இன்னும் 5 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், கர்நாடகா அரசு தண்ணீர் திறப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.