இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
2023-24ஆம் ஆண்டிற்கு https://scholarships.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்ச கட்ட வருமான வரம்பு ரூபாய் 2.5 லட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் டிசம்பர் 31. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் ஜனவரி 15- ஆம் தேதி ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) என்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாகத் தேர்வுச் செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) New Registration என்ற இணைப்பில் (Link) சென்று தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறும் பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

