ட்ரெண்டிங்

எந்தவித அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வந்த பார்கள் மூடல்- 4 பேர் கைது!

ஓமலூர், தொளசம்பட்டி காவல் நிலையத்திற்கு எல்லையில் அனுமதியின்றி செயல்பட்ட நான்கு திறந்தவெளி பார்களை காவல் ஆய்வாளர் மூடினார். அதேபோல், பார் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய முக்கிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையில் முத்துநாயக்கன்பட்டி தோப்புக்காடு அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தினமும் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு மதுவிற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பார்கள் நடத்த இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

 

இந்த நிலையில், தோப்புக்காடு டாஸ்மாக் கடைப் பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல், நான்கு கடைகள் அமைத்து திறந்தவெளி பார்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்களில், தண்ணீர், தின்பண்டங்கள், மது அருந்த தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனைச் செய்யப்படுகின்றன.

 

மேலும், கடைகளில் காலை 10.00 மணி முதல் மது விற்பனையைத் தொடங்கி, அங்கேயே அமர்ந்து மது அருந்தவும் அனுமதி அளிக்கின்றன. அதனால் இந்த பகுதியில் எப்போதும் மதுக்குடிப்பவர்களின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. மேலும், மதுக்கடை முன்பாக, தனியார் நிலத்தில் திறந்தவெளி பார் திறக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து செய்தி வெளியான நிலையில், தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியர் தலைமையிலான காவலர்கள், அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது, பார்கள் செயல்பட்டு வருவதை அறிந்து, அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர், உடனடியாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாரினை மூடி, பாரை நடத்திய நான்கு பேரை கைது செய்தார்.