ட்ரெண்டிங்

மாற்று இடத்தில் மைதானத்தை அமைத்துத் தர இளைஞர்கள் கோரிக்கை!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இளைஞர் பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் கட்டடப்பணிகள் 13 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

 

தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள பகுதியில் கடந்த 2010- ஆம் ஆண்டு 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 22.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பார்வையாளர்கள் அமரும் படிக்கட்டுகளும், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மைதானத்தைச் சீரமைத்து, விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் பணிகளும் தொடங்கப்பட்ட நிலையில், 30% பணிகள் மட்டுமே நிறைவுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

 

மைதானம் முழுக்க பெரிய அளவிலான பாறைகள் இருப்பதால், நிதிப்பற்றாக்குறை எனக் கூறி, ஒப்பந்ததாரர்கள் கட்டிடப் பணிகள் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் முழுமைப் பெறாத திட்டப்பணி பாதியிலேயே ஊசலாடி வருகிறது.

 

விளையாட்டு மைதானம் இல்லாததால், பக்கத்துக்கு ஊர்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதாகவும், மாற்று இடத்தில் மைதானத்தை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

இது குறித்து வட்டாட்சியர் மாணிக்கம் கூறுகையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.