ட்ரெண்டிங்

சேலம் உள்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்.24) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 4 செ.மீ. மழையும், டேனிஸ்பேட்டை, மேட்டூரில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.